சரோஜாதேவிக்கு திருமணம்: என்ஜினீயர் ஸ்ரீஹர்ஷாவை மணந்தார்
நடிகை சரோஜாதேவி _ ஸ்ரீஹர்ஷா திருமணம், பெங்களூரில் 1967 மார்ச் 1-ந்தேதி நடைபெற்றது. சரோஜாதேவி, தமிழ்ப்பட உலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தபோதே, அவருக்குத் திருமணம் செய்து வைக்க தாயார் ருத்ரம்மா ஏற்பாடு செய்தார். இதுபற்றி சரோஜாதேவி ஒரு கட்டுரையில் கூறியிருப்பதாவது:_
எனக்கு திருமணம் செய்யப்போவதாக எனது தாயார் அறிவித்ததும், அது சினிமா உலகில் பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது. பொதுவாக, சினிமா நடிகை என்றால் திருமணத்துக்குப்பின் நடிக்க முடியாது. அவளுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது குதிரைக் கொம்புதான். எனவேதான், பலரும் `சரோஜாதேவி இப்போதே ஏன் திருமணம் செய்து கொள்ளவேண்டும் இன்னும் பல படங்களில் நடித்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாமே' என்று கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆனால் எனது தாயார், `எந்த வயதில் எது நடக்க வேண்டுமோ அந்த வயதில் அது நடந்தே தீர வேண்டும்' என்பதில் கண்டிப்பாக இருந்தார். அவருடைய இஷ்டப்படியே நானும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டேன். திருமணத்துக்கு முன்னால் எனது தோழி சுசீலா என்னிடம் சிறந்த மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்றால், ஆஞ்சநேயருக்கு விரதம் இருக்கவேண்டும் என்று கூறினார். அந்த யோசனைப்படி நான் தினமும் ஈரத்துணியுடன் அந்த விரதத்தை இருந்து வந்தேன். அதன் பலனாகத்தான் எனக்கு சிறந்த கணவர் கிடைத்தார் என்று நினைக்கிறேன்.
எனக்கு என் தாயார் பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்தார். இறுதியில், ஜெர்மனியில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்த ஸ்ரீஹர்ஷாவை தேர்ந்தெடுத்தார். இதில், என் சொந்த விருப்பம் எதுவும் இல்லை. என் தாயார்தான் மாப்பிள்ளையை முடிவு செய்தார்." இவ்வாறு சரோஜாதேவி கூறியுள்ளார். சரோஜாதேவியின் திருமணம் 1967 மார்ச் 1-ந்தேதி பெங்களூரில் உள்ள உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடந்தது. திருமணத்துக்கு முதல்நாள், பெங்களூர் மல்லீஸ்வரத்தில் உள்ள சரோஜாதேவி வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. சரோஜாதேவியின் வீடு முழுவதும், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணி முதல் 11 மணி வரை "சுமங்கலி பூஜை" நடந்தது. பெண் வீட்டையும், மாப்பிள்ளை வீட்டையும் சேர்ந்த 100 சுமங்கலிப் பெண்கள், மணமகள் சரோஜாதேவிக்கு வளையல்கள் அணிவித்தார்கள். மாலையில் நடந்த நிச்சயதார்த்தத்தின் போது, மாப்பிள்ளை வீட்டார் கொடுத்த பட்டுச் சேலையை சரோஜாதேவி அணிந்து வந்து, மாப்பிள்ளையின் தந்தைக்கும், தன் தந்தைக்கும் பாதபூஜை நடத்தினார். மறுநாள் காலை 11 மணிக்குத் திருமணம் நடைபெற்றது. முதலில் "மாப்பிள்ளை அழைப்பு" நடந்தது. மேள தாளம் முழங்க மாப்பிள்ளையை அழைத்து வந்து மணமேடையில் அமரச் செய்தார்கள். பின்னர் சரோஜாதேவி அழைத்து வரப்பட்டார். மாப்பிள்ளை அருகே அவர் அமர்ந்தார். புரோகிதர்கள் மந்திரம் சொல்ல, சரியாக 11 மணிக்கு சரோஜாதேவி கழுத்தில் ஸ்ரீஹர்ஷா தாலி கட்டினார்.
திருமணத்தைக் காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தார்கள். திருமணத்தையொட்டி, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாட்டுக் கச்சேரி நடைபெற்றது. சரோஜாதேவிக்கு வாழ்த்து தெரிவத்து, பகவத் கீதை புத்தகத்தையும், வாழ்த்துச் செய்தியையும் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அனுப்பியிருந்தார்.
"பகவத் கீதையில் கூறியுள்ளபடி, குடும்பம் நடத்துங்கள். உங்கள் இல்லறம் மகிழ்ச்சியுடன் நடக்க என் வாழ்த்துக்கள். திருமணம் முடிந்ததும், இருவரும் என்னை சந்தியுங்கள்" என்று வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டு இருந்தார். தமிழ்நாடு கவர்னர் உஜ்ஜல்சிங், கர்நாடக கவர்னர் வி.வி.கிரி ஆகியோரும் வாழ்த்துச் செய்திகள் அனுப்பியிருந்தனர். மார்ச் 5-ந்தேதி, சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மைலாப்பூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பட அதிபர்கள், நடிகர்-நடிகைகள் பெருந்திரளாக வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.
திருமணத்துக்குப்பின் சரோஜாதேவி சினிமாவில் நடிப்பதை, அவர் தாயார் விரும்பவில்லை. ஆனால், ஸ்ரீஹர்ஷாவை சந்தித்த திரை உலகத்தினர், "சரோஜாதேவி மிகச்சிறந்த நடிகை. தமிழ்நாட்டில் அவருக்கு பேரும், புகழும் நிறைய இருக்கிறது. அவரை நடிக்கக்கூடாது என்று தடை போட்டுவிடாதீர்கள்" என்று கேட்டுக்கொண்டார்கள்.
"பெண்கள் வீëட்டில் சும்மா இருப்பது எனக்குப் பிடிக்காத விஷயம். பெண்கள், தங்களுக்கு உள்ள திறமையை வீணாக்கக் கூடாது. எனவே, சரோஜாதேவி தொடர்ந்து நடிப்பார்" என்று ஸ்ரீஹர்ஷா கூறினார். இதன் காரணமாக, சரோஜாதேவி நடிக்க அவர் தாயாரும் சம்மதம் தெரிவித்தார்
சரோஜாதேவி திருமணத்துக்குப்பின் நடித்த சிறந்த படங்கள்
திருமணத்துக்குப்பின் பல சிறந்த படங்களில் சரோஜாதேவி நடித்தார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் கதை- வசனம்- டைரக்ஷனில் உருவான படம் 'பணமா பாசமா.' இதில் ஜெமினிகணேசனுடன் இணைந்து நடித்தார், சரோஜா தேவி. அவருக்கு அம்மாவாக எஸ்.வரலட்சுமி நடித்தார். குடும்ப நிகழ்ச்சிகளை வைத்து பின்னப்பட்ட 'பணமா பாசமா', 23-2-1968-ல் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்றுவெள்ளிவிழாகொண்டாடியது. இதே ஆண்டில் வெளிவந்த 'தாமரை நெஞ்சம்', சரோஜாதேவி மிகச்சிறப்பாக நடித்த வெற்றிப்படம். கே.பாலசந்தர் கதை-வசனம் எழுதி டைரக்ட் செய்த படம். இதில் சரோஜாதேவியுடன் ஜெமினிகணேசன், வாணிஸ்ரீ நடித்தனர். படத்தின் முடிவு சோகமானது. டெலிபோனில் பேசியபடியே, ஒவ்வொரு தூக்க மாத்திரையாக சரோஜாதேவி சாப்பிடும் அந்த கட்டம், நெஞ்சத்தைப் பிழிய வைத்தது. 1969-ல் வெளிவந்த 'குலவிளக்கு' படமும் சிறப்பாக அமைந்தது. 1970-ல் வெளிவந்த 'தேனும் பாலும்' என்ற படத்தில் சிவாஜி கணேசனுடன் பத்மினியும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர்.ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற படம்
1974 ஆண்டு வெளிவந்த 'பத்து மாத பந்தம்' என்ற படத்தில், பானுமதியும், சரோஜாதேவியும் சேர்ந்து நடித்தனர். இது சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது. இதே கால கட்டத்தில், ஏராளமான கன்னடப்படங்களிலும் சரோஜாதேவி நடித்தார். திருமணத்துக்குப்பின் நடித்தது பற்றி, சரோஜாதேவி கூறியிருப்பதாவது:-
'கணவர் சம்மதம் கொடுத்ததால், படங்களில் தொடர்ந்து நடித்தேன். நடிகைகள் திருமணம் செய்து கொண்டால், பட வாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற பொதுவான கருத்து என்னைப் பொறுத்த வரை பொய் ஆகிவிட்டது. திருமணத்துக்குப் பிறகு ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்தேன். திருமணத்துக்குப்பின் நான் நடிக்கக்கூடாது என்பதே என் தாயாரின் எண்ணம். ஆனால், என் கணவர் அனுமதி அளித்ததால் என் தாயார் தடுக்கவில்லை. என் தாயார் மிகவும் கண்டிப்பானவர்.
திருமணத்துக்குமுன், அவர் அனுமதி இன்றி நான் எங்கும் போகமுடியாது. அவர் எவ்வளவு கண்டிப்பானவர் என்பதை விளக்க, ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன். ஒரு நாள் எனது தாயார் வீட்டில் இல்லாதபோது, நான் என் தோழி சுசீலாவுடன் சென்னை மவுண்ட்ரோடு பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்கு படம் பார்க்கப் போய்விட்டேன். ஒரு நடிகை தியேட்டருக்கு போவது என்பது மிகவும் தொந்தரவானது.ரசிகர்கள் பார்த்தால் அது மிகுந்த தொல்லையில் கொண்டு விட்டுவிடும். என் தாயார் வீட்டுக்கு வந்ததும், நான் சுசீலாவுடன் சினிமாவுக்குப் போயிருப்பதை தெரிந்து கொண்டார். ஆத்திரம் அடைந்த அவர், நேராக தியேட்டருக்கு வந்தார். தியேட்டர் மானேஜரிடம் கூறி, 'சுசீலா உடனே மானேஜர் அறைக்கு வரவும்' என்று 'சிலைடு' போடச்சொல்லிவிட்டார். அந்த சிலைடைப் பார்த்ததும் நாங்கள் அலறியடித்துக்கொண்டு ஓடிவந்தோம்.
அப்போது எனது தாயார், யாரிடமும், எதுவும் பேசாது, என்னை தரதர என்று இழுத்துச் சென்றுவிட்டார். எனக்கு ரொம்பவும் அவமானமாகப் போய்விட்டது. என் தோழியிடம் விளக்கி சொல்லாமல் சென்று விட்டேனே என்று நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். எனது தாயாரிடம் பிறகு சண்டை போட்டேன். ஆனால் எனது தோழி சுசீலாவோ அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இன்று வரை அவருடன் எனது நட்பு தொடருகிறது. எனது தாயாருக்கு, எனக்கு முன்பு 3 பெண் குழந்தைகள். நான் 4-வது குழந்தை. நான் வயிற்றில் இருந்தபோது, நான் ஆணாகப் பிறக்க வேண்டும் என்று எனது தாயார் பல்வேறு கோவில்களுக்குச் சென்று பூஜைகள் செய்தார்.
சத்தியநாராயண பூஜை என்ற விசேஷ பூஜை செய்தால், ஆண் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கைப்படி எனது தாயார் அந்த பூஜையை செய்து வந்தார். அந்த பூஜை முழுவதும் முடிந்தது. என்றாலும் நான் பெண்ணாகப் பிறந்தேன். இது, வீட்டில் இருந்த பலருக்கு ஏமாற்றத்தை அளித்தது. நான் பிறந்தபோது எனது தாத்தா 'இந்தப் பெண் நமக்கு வேண்டாம். இவளை எங்கேயாவது வீசி எறிந்துவிடுங்கள். இல்லாவிட்டால், குழந்தை வேண்டும் என்று கேட்கும் யாருக்காவது கொடுத்து விடுங்கள்' என்று கூறினார். ஆனால், நான் வளர்ந்து பெரியவளாகி நடிகையாக வந்து குடும்ப பாரத்தை சுமக்கத் தொடங்கியதும், அதே தாத்தா என்னிடம் வந்து, 'உன்னை பிறருக்கு தந்துவிடும்படி சொன்னேனே!' என்று வருந்தி கண்ணீர் சிந்தினார்.
நான், சென்னை அடையாறில் ஒரு பங்களாவை விலைக்கு வாங்கியிருந்தேன். என்னுடைய கணக்கு வழக்குகளை பார்த்தவர்கள், சரியானபடி வருமான வரி கணக்குகளை எழுதாத காரணத்தால் அந்த பங்களா ஏலத்துக்கு வந்துவிட்டது. வீடு ஏலத்தில் போனால் எவ்வளவு அவமானம் என்று நான் வருந்தியபோது, என் கணவர், என்னை அமைதிப்படுத்தி, 'அந்த வீட்டை விற்று கடனை அடைத்துவிடலாம்' என்று யோசனை தெரிவித்தார். அந்த யோசனைப்படி அந்த வீட்டை விற்று கடனை அடைத்தேன். அதன்பிறகு, கணக்கு வழக்குகளை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை என் கணவரிடம் இருந்து கணக்கு வழக்குகளை நானே பார்த்து வருகிறேன். இப்போது எந்த வரிப்பிரச்சினையும் இல்லை.'
இவ்வாறு சரோஜாதேவி கூறினார்.