maalaimalar.com  06 03 2012

சிவாஜியுடன் சரோஜாதேவி நடித்த சிறந்த படங்கள்

சிவாஜிகணேசனுடன் சரோஜாதேவி நடித்த படங்கள், மாபெரும் வெற்றிச் சித்திரங்களாக அமைந்தன.அத்தகைய மகத்தான படங்களில் ஒன்றான 'பாகப்பிரிவினை', 31-10-1959-ல் வெளிவந்தது.நடிப்பு, கதை, வசனம், பாடல்கள் எல்லாமே சிறப்பாக அமைந்தன.தவிரவும் எம்.ஆர்.ராதாவுக்கு இப்படம் பெரிய திருப்பு முனை ஏற்படுத்தியது.

`எம்.ஆர்.ராதா இல்லாத படமே இல்லை' என்ற நிலையை உண்டாக்கியது. 'பாகப்பிரிவினை படத்தில் எம்.ஆர்.ராதா வில்லனாக நடித்தார்.அவர் நடித்த 'ரத்தக்கண்ணீர்' படத்தை சரோஜாதேவி ஏற்கெனவே பார்த்து இருக்கிறார். அதில் இருந்தே அவரைப் பார்த்தால் சரோஜாதேவிக்கு பயம். பாகப்பிரிவினை படத்தில் எம்.ஆர். ராதாவை துடைப்பத்தால் அடிப்பதை போன்ற ஒரு காட்சி உண்டு. அவரைப்பார்த்து மிரண்டு போய்விட்ட சரோஜாதேவி, `அவரை எப்படி அடிப்பது' என்று திகைத்து நின்றார்.

அவருக்கு அதற்கான தைரியம் வரவில்லை. இயக்குனர் பீம்சிங் அவருக்கு தைரியம் சொல்லிக்கொண்டு இருந்தார்.அப்போது அங்கு வந்த எம்.ஆர்.ராதா, 'யாரப்பா இந்த அனுபவம் இல்லாத நடிகை. இந்த பெங்களூர் பெண் சரியாக நடிக்காது என்று சிலர் சொன்னார்கள். அது சரியாக இருக்கிறதே?' என்றார்.

அவர் தொடர்ந்து சொன்னார்:

'இந்தக் காட்சியை படமாக்க நான் ஒரு ஐடியா கொடுக்கிறேன்.அறைக்குள் நானும், சரோஜாதேவியும் இருக்கிறோம். வெளியே என் அலறல் சத்தம் கேட்கவேண்டும். அலறி அடித்துக்கொண்டு நான் ஓடிவருவேன். நான் வரும் காட்சியை படமாக்குங்கள்.அறைக்குள் என்னை சரோஜாதேவி அடித்ததாக, ரசிகர்கள் ஊகித்துக் கொள்வார்கள்.

இவ்வாறு ராதா கூறினார்.

அவ்வாறே அக்காட்சி படமாக்கப்பட்டது.இதே படத்தில், சரோஜாதேவி பிரசவ வேதனையால் துடிக்கும் காட்சி உண்டு. அக்காட்சியில் எப்படி நடிப்பது என்று அவர் திணறிக்கொண்டு இருந்தார்.அப்போது அங்கு வந்த சிவாஜி அந்த காட்சியில் அவர் எப்படி நடிக்கவேண்டும் என்பதை அருமையாக நடித்து காண்பித்தார். அதைப்பார்த்து சரோஜாதேவி அப்படியே நடித்தார்.

இந்த காட்சி தத்ரூபமாக அமைந்தது.இந்த தகவலை நடிகை சரோஜாதேவியே கூறி இருக்கிறார். 'நடிகர் திலகம் சிவாஜிகணேசன், எப்போதும் தனது காட்சி முடிந்த உடன் அந்த இடத்தைவிட்டு போய் விடமாட்டார். அருகிலேயே நின்று, மற்ற நடிகர்களின் நடிப்பை பார்த்து அவர்களின் நடிப்பில், ஏதாவது குறைகள் இருந்தால் அதுபற்றி எடுத்து கூறுவார்' என்றும் சரோஜா தேவி கூறி இருக்கிறார்.

'பார்த்தால் பசிதீரும்' படத்தில் சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன், சாவித்திரி, சரோஜாதேவி, சவுகார் ஜானகி, போன்ற பல பெரிய நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர்.படத்தில் பெயர் (டைட்டில்) போடும்போது இவர்களில் யார் பெயரை முன்னால் போடுவது என்பது பற்றி பெரிய சர்ச்சையே எழுந்தது.

யார் பெயரை முன்னால் போட்டாலும் இன்னொருவருக்கு கோபம் வரும் என்ற நிலை.இறுதியில் அந்த பிரச்சினைக்கு தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் ஒரு முடிவு கண்டார்.அதன்படி படத்தில் யாருடைய பெயரும் போடப்படவில்லை. 'உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும்' என்று எழுதப்பட்டு அதைச்சுற்றிலும் எல்லா நடிகர், நடிகைகளின் படங்களும் இடம் பெற்றன. 'பாலும் பழமும்', 'புதிய பறவை' ஆகிய படங்கள் சிவாஜி- சரோஜாதேவி இணைந்து நடித்த ஒப்பற்ற படங்களாகும்.

'தாய் சொல்லைத் தட்டாதே' கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட பாடல் காட்சி- 4 மணி நேரத்தில் நடித்துக் கொடுத்த சரோஜாதேவி

'தாய் சொல்லைத் தட்டாதே' படத்தில், ஒரு பாடல் காட்சி கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டது. அதை 4 மணி நேரத்தில் சரோஜாதேவி நடித்துக் கொடுத்தார்.1961-ல் சின்னப்பா தேவர் எடுத்த படம் 'தாய் சொல்லைத் தட்டாதே.' இதில் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா நடித்தனர். ஆரூர்தாஸ் கதை- வசனம் எழுத, எம்.ஏ.திருமுகம் டைரக்ட் செய்தார்.படம் தயாராகி முடிந்ததும், முதல் பிரதியைப் போட்டுப் பார்த்தார்கள்.

இன்னொரு பாடலைச் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார், தேவர். உடனே பாடல் எழுதப்பட்டது.பொதுவாக ஒரு பாடல் காட்சியைப் படமாக்க, இரண்டு நாட்களாவது தேவைப்படும். ஆனால், சரோஜாதேவி ஒரு இந்திப் படத்தில் நடிக்க `கால்ஷீட்' கொடுத்திருந்தார். அதை ரத்து செய்ய முடியாது. 'அரை நாள் மட்டும் ஒதுக்கிக் கொடுங்கள். பாடல் காட்சியில் உங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து முடித்து விடுகிறேன்' என்றார், தேவர். அதற்கு சரோஜாதேவி சம்மதித்தார்.

அதன்படி, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மின்னல் வேகத்தில் படமாக்கப்பட்டன.நான்கு மணி நேரத்தில் பாடல் காட்சியை நடித்து முடித்துவிட்டு, பம்பாய்க்குப் பறந்தார், சரோஜாதேவி. 'தாய் சொல்லைத் தட்டாதே' படத்தில், கடைசியாக சேர்க்கப்பட்ட அந்தப் பாடல் பெரிய 'ஹிட்' ஆக அமைந்தது. 'பட்டுச்சேலை காத்தாட...' என்ற பாடல்தான் அது.எழுத்தாளர் லட்சுமி (டாக்டர் திரிபுரசுந்தரி) எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் 'இருவர் உள்ளம்' (1963). 'மனோகரா'வுக்குப் பிறகு கருணாநிதி, சிவாஜிகணேசன், டைரக்டர் எல்.வி.பிரசாத் ஆகிய மூவரும் இப்படத்தில் ஒன்று சேர்ந்தனர்.

கதாநாயகி சரோஜாதேவி.கலைஞர் கருணாநிதி எழுதிய வசனங்களை, முதல் தடவையாக சரோஜாதேவி பேசி நடித்தார். 'எனக்கு என்ன அழகில்லையா, படிப்பில்லையா, பணம் இல்லையா? என்னை ஏன் திருமணம் செய்ய சம்மதிக்க மறுக்கிறாய்?' என்று சிவாஜி கேட்கும் கேள்விக்கு 'படிப்பில் நீமேதையாக இருக்கலாம். பணத்தில் நீ குபேரனாக இருக்கலாம், அழகில் நீ மன்மதனாக இருக்கலாம் ஆனால் என்னை மணக்கும் கண்ணியம் உன்னிடம் இல்லை!' என்று சரோஜாதேவி பதில் வசனம் பேசவேண்டும். ஆனால் ஒரே தடவையில் இந்த வசனத்தைப் பேச முடியவில்லை.உடனே, அவர் தயக்கத்தை போக்க சிவாஜி ஒரு யுக்தி செய்தார். சுற்றிலும் கூடியிருந்தவர்களை விலகிப்போகச் சொன்னார். 'தைரியமாகப் பேசு' என்று சரோஜாதேவியை உற்சாகப்படுத்தினார்.

அதன்பின், ஒரே 'டேக்'கில் அந்தக் காட்சி 'ஓகே' ஆயிற்று.வாகினி அதிபர் நாகிரெட்டி தயாரித்த படம் 'எங்க வீட்டுப் பிள்ளை' (1965). அந்தப்படத்தில் கதாநாயகியாக சரோஜா தேவி நடித்தார். சரோஜாதேவியை ஒப்பந்தம் செய்வதற்காக அவர் சரோஜாதேவியைத் தேடி வந்தது ஒரு சுவாரஸ்யமான கதை.இதுபற்றி நடிகை சரோஜாதேவி கூறியதாவது:-'ஒருநாள் அதிகாலை நாங்கள் விழித்து எழுந்து வெளியில் வந்த போது, வீட்டு வாசலில், ஒரு ஹெரால்டு கார் நின்று கொண்டு இருந்தது. காரில் தயாரிப்பாளர் நாகிரெட்டி இருந்தார்.

அவரைப் பார்த்ததும் எனது அம்மா அதிர்ச்சி அடைந்து, 'நீங்கள் இப்படி செய்யலாமா? வந்த உடனே அழைப்பு மணியை அடித்து இருக்கலாமே' என்று கூறினார்.அதற்கு நாகிரெட்டி, 'நீங்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்ததால் உங்களை தொல்லைப்படுத்த வேண்டாம் என்று காத்து இருந்தேன்' என்று கூறினார்.

பின்னர், 'என் படத்தில் நடிக்க சரோஜாவை ஒப்பந்தம் செய்யவே வந்து இருக்கிறேன்' என்று சொன்னார்.அப்போதெல்லாம் அதிகாலை நேரத்தில் சென்றால் மட்டுமே நடிகர்- நடிகைகளை வீட்டில் பிடிக்க முடியும். இல்லாவிட்டால் படப்பிடிப்புக்கு போய் விடுவார்கள். அதனால்தான், அதிகாலை நேரத்திலேயே நாகிரெட்டி வந்து காத்திருந்தார். அவர் கேட்டுக் கொண்டபடி, 'எங்க வீட்டுப் பிள்ளை'யில் நடித்தேன்.'இவ்வாறு சரோஜாதேவி கூறினார்.ஏவி.எம். தயாரித்த 'அன்பே வா' படத்தில், எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர்.

அந்தப் படத்தில், வித்தியாசமான உடையில் சரோஜா தேவி தோன்றுவார். அந்த உடையை தேர்வு செய்தவர், ஏவி. மெய்யப்ப செட்டியார்தான். 'அன்பே வா' படம் தயாராகி வந்தபோது, ஒரு நாள் ஏவி.எம். பெங்களூருக்குச் சென்றிருந்தார். அங்கு 'வக்த்' என்ற இந்திப்படம் ஓடிக்கொண்டு இருந்தது. அந்தப் படத்தை மெய்யப்ப செட்டியார் பார்த்தார்.படத்தில் கதாநாயகி அணிந்து இருந்த சுடிதார் போன்ற உடை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்த உடை, நிச்சயம் தனது 'அன்பே வா' படத்தில் இடம் பெறவேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்.சென்னைக்குத் திரும்பியதும் முதல் வேலையாக 'அன்பே வா' படத்தின் தையல் கலை நிபுணரை விமானத்தில் பெங்களூருக்கு அனுப்பி வைத்தார். தான் பார்த்த இந்திப்படத்தை பார்க்கும்படியும், அந்தப் படத்தில் கதாநாயகி அணிந்து இருக்கும் அதே மாதிரி உடையை சரோஜாதேவிக்கு தைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னார்.அதன்படி, அந்த உடையை தையல் கலைஞர் தைத்துக் கொடுக்க, அதை அணிந்து சரோஜாதேவி நடித்தார். அந்த உடை புதுமையாக இருந்தது. குறிப்பாக, பெண்களை அந்த உடை வெகுவாகக் கவர்ந்தது.

பலர் அதே மாதிரி உடை அணிய ஆரம்பித்தனர். அதுவே அனைவரும் விரும்பும் பேஷன் ஆகிவிட்டது, அப்போது!டெல்லியில் பட விழா ஒன்றில் கலந்து கொண்ட சரோஜாதேவிக்கு, பிரதமர் நேரு பரிசு வழங்கினார். அப்போது, 'நீ பிரகாசமான நட்சத்திரம். மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள்' என்று கூறினார்.