சகாப்தம் படைத்த சரோஜாதேவி: தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த கன்னடத்துக்கிளி
தமிழ் சினிமா உலகில் 25 வருடங்களாக முன்னணி நடிகையாக விளங்கியவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜிகணேசன், காதல் மன்னன் ஜெமினிகணேசன் ஆகிய 3 பேருடனும் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர். ஒரு காலத்தில் 'சூப்பர் ஸ்டார்'களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைகளை பெற்றவர் நடிகை சரோஜாதேவி.
பெங்களூரைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி பைரப்பா, ருத்ரம்மா ஆகியோரின் 4-வது மகளாகப் பிறந்த சரோஜா தேவி, சினிமா உலகில் நுழைந்தது சுவையான கதை. அவர் பெங்களூரில் உள்ள புனித தெரசா பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டு இருந்தார். அப்போது, மேயோஹாலில் ஒரு இசைப்போட்டி நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கூடத்தின் சார்பில் சரோஜா தேவியை கலந்து கொள்ளச் சொன்னார்கள். அவர் கலந்து கொண்டு 'ஏ ஜிந்தகி கே' என்ற இந்தி பாடலை பாடினார். அந்த பாடல் நிகழ்ச்சிக்கு கன்னட திரை உலகத்தின் பிரபல பட அதிபரும், நடிகருமான ஹொன்னப்ப பாகவதர் வந்து இருந்தார்.
(ஹொன்னப்ப பாகவதர், 'வால்மீகி', 'ஸ்ரீமுருகன்', 'பர்மா ராணி' முதலிய தமிழ்ப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர்.) சரோஜாதேவியின் பாடலைக்கேட்ட ஹொன்னப்ப பாகவதர், 'இந்த சிறுமி நன்றாக பாடுகிறாள்.
குரல் வளம் நன்றாக இருக்கிறது. இவளை சினிமா படத்தில் பின்னணி பாட வைத்தால் என்ன' என்ற எண்ணத்துடன் சரோஜாதேவியின் தாயாரை அணுகினார்.
அதன்படி, சினிமா ஸ்டூடியோவுக்கு அழைத்துச்சென்று, அவருக்கு குரல் வளத்துக்கான சோதனையை செய்ய உத்தரவிட்டார். சோதனையின்போது சரோஜாதேவியை பார்த்த ஹொன்னப்ப பாகவதருக்கு அவரை நடிகையாக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. உடனே அதற்கான ஒப்பனை செய்து பார்க்கும்படி சொன்னார். அந்த ஒப்பனையின்போது அவரின் தோற்றம் அங்கு இருந்தவர்களுக்கு பிடித்துவிடவே சரோஜாதேவியை சினிமாவில் நடிக்க ஹொன்னப்ப பாகவதர் ஒப்பந்தம் செய்தார்.
அதன்படி ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. முதல் படமே வெற்றிப்படமாக அமைந்து ராசியான நடிகை என்று பெயர் பெற்ற அவரை, தனது அடுத்த படமான 'பஞ்ச ரத்தினம்' என்ற கன்னட படத்திலும் கதாநாயகியாக நடிக்க வைத்தார். ஒரு படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டுப் படிக்கப் போய்விடலாம் என்று நினைத்த சரோஜாதேவிக்கு, இது சற்று சங்கடத்தை தந்தாலும், தனது தாயாரின் விருப்பப்படி தொடர்ந்து நடித்தார்.
அந்தப் படத்துக்கு பிறகு, இயக்குனர் கே.சுப்பிரமணியம் தயாரித்த கச்ச தேவயானி என்ற கன்னட படத்தில் நடித்தார்
நாடோடி மன்னனில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி?- சரோஜாதேவி தகவல்
கன்னடப் படத்தில், எடுத்த எடுப்பிலேயே கதாநாயகியாக அறிமுகமாகிப் புகழ்பெற்ற சரோஜாதேவிக்கு, தமிழ்நாட்டில் பெரிய புகழைத் தேடித்தந்த படம் எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன் இதுபற்றி, சரோஜாதேவி ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதாவது:
"கன்னட கச்சதேவயானி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டு இருந்தது. அப்போது கோடி சூரியபிரகாசத்துடன் ஒருவர் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு வந்தார். அவரைப் பார்த்ததும், அங்கு இருந்த எல்லோரும் எழுந்து, வணக்கம் தெரிவித்தனர். ஆனால், அவர் யார் என்று எனக்கு தெரியாது. எனவே நான் பேசாமல் உட்கார்ந்து இருந்தேன். அவர் படப்பிடிப்பு தளத்தினை சுற்றிப் பார்த்துவிட்டு இயக்குனரிடம் சென்றார். என்னைக்காட்டி, "யார் அந்த பெண்" என்று கேட்டார்.
அதற்கு இயக்குனர் "அவர்தான் இந்தப் படத்தின் கதாநாயகி. புதுமுகம். பெங்களூரை சேர்ந்தவர். பெயர் சரோஜாதேவி" என்று தெரிவித்தார்.
வந்தவர் பேசாமல் சென்றுவிட்டார். அவர் போகும்போதும் எல்லோரும் எழுந்து வணக்கம் தெரிவித்து பணிவுடன் வழியனுப்பினார்கள். அவர் சென்றபிறகு "வந்தது யார்" என்று நான் இயக்குனரிடம் கேட்டேன். "அவர்தான் எம்.ஜி.ஆர்" என்று அவர் தெரிவித்தார். அதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். "அவ்வளவு பெரிய மனிதர் வந்து இருக்கிறார். எதுவும் தெரியாமல் சும்மா இருந்து விட்டோமே" என்று நான் வருந்தினேன்.
எம்.ஜி.ஆர். நடிக்க ஒப்பந்தமாகியிருந்த ‘திருடாதே’ என்ற படத்தில் நடிக்க கதாநாயகியை தேடிவந்தனர். பட அதிபர் ஏ.எல்.சீனிவாசனிடம் எம்.ஜி.ஆர். "கச்சதேவயானி படத்தில் ஒரு கன்னடப்பெண் நடித்து வருகிறார். அவரை அழைத்து வந்து ஒப்பனை செய்து பாருங்கள். பிடித்து இருந்தால் கதாநாயகியாக போடலாம்" என்று கூறினார்.
அதன்படி ஏ.எல்.சீனிவாசன், சின்ன அண்ணாமலை, மா.லட்சுமணன் மற்றும் பலர் முன்னிலையில் எனக்கு ‘மேக்கப் டெஸ்ட்’ நடந்தது. எம்.ஜி.ஆர். என்னை தேர்வு செய்தாலும், `ஒரு புதுமுகத்தை எப்படி நமது படத்தில் போடுவது' என்று அவர்களுக்கு குழப்பமாக இருந்தது. அவர்கள் யாரும் எம்.ஜி.ஆரிடம் இதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர். அதை புரிந்து கொண்டார். என்றாலும் என்னைத்தான் கதாநாயகியாக போடவேண்டும் என்று அவர் வற்புறுத்தவில்லை. என்றுமே அவர் யாரையும் எதற்காகவும் வற்புறுத்தியது கிடையாது. அவருடைய கருத்தை யார் மீதும் திணித்தது கிடையாது. இந்த சூழ்நிலையில் என்னை கதாநாயகியாகப் போடவேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் எண்ணத்தில் மட்டும் மாற்றம் இல்லை
அவருடைய சொந்த தயாரிப்பான 'நாடோடி மன்னன்' படத்தில் இரண்டாவது கதாநாயகியாக என்னை அவர் நடிக்க ஒப்பந்தம் செய்தார். முதல் பாதி கறுப்பு வெள்ளையிலும் பிற்பகுதி கலரிலும் வந்த படம் அது. அந்த படத்தில் நான் அறிமுகமாகும் இடத்தில்தான் கலர் பகுதி ஆரம்பம் ஆகும். எம்.ஜி.ஆரின் 'நாடோடி மன்னன்' மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
கன்னடத்தில் பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் நான் நடித்த 'ஸ்கூல் மாஸ்டர்' என்ற படம் தமிழில் 'எங்கள் குடும்பம் பெரிசு' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் ஓடிக் கொண்டு இருந்தது. மைலாப்பூரில் உள்ள ஒரு தியேட்டரில் அந்த படம் பிரமாதமாக ஓடி பெரிய வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் கவுரவ வேடத்தில் நடித்து இருந்தார். சிறு பாத்திரம் என்றாலும், எல்லோரும் மிகவும் ரசிக்கும் விதத்தில் இந்த பாத்திரம் இருந்தது.
மாணவ பருவத்தில், வேறொரு மாணவனிடம் பேனா திருடும் வேடத்தில் சிவாஜி நடித்து இருந்தார். சிறு வயதில் இப்படி திருட்டு மாணவனாக இருக்கும் அவர், பிற்காலத்தில் பெரிய அதிகாரியாக வந்து, தனது ஆசிரியரின் வீடு ஏலத்தில் வரும்போது அதை ஏலத்தில் எடுத்து தனது ஆசிரியருக்கே வழங்குவார். குரு - சிஷ்யன் உறவை விவரிக்கும் விதத்தில் அந்த படத்தில் சிவாஜி அருமையாக நடித்து இருப்பார். தனது குரு இக்கட்டான நிலையில் இருக்கும்போது அவரை சந்திக்கும் காட்சியில், வெறும் பார்வை மூலமாகவே அற்புத நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரையும் கவர்ந்தார்.தமிழில் நேரடி படங்களில் நான் நடித்து பெரும் புகழ் பெற்றாலும், என்னை தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தது அந்த கன்னட டப்பிங் படமே ஆகும். "எங்கள் குடும்பம் பெரிசு என்ற படத்தைப் பற்றி ஒரு பத்திரிகை விமர்சனத்தில் என்னைப்பற்றி எழுதியபோது, ஒரு பக்கம் பார்த்தால் பத்மினி போன்றும், மறுபுறம் பார்த்தால் வைஜயந்தி மாலா போன்றும் இருப்பதாக எழுதி இருந்தார்கள்."
இவ்வாறு சரோஜாதேவி குறிப்பிட்டுள்ளார்.
(கல்யாணப் பரிசு ஏற்படுத்திய திருப்பம் _ நாளை)