30 06 2025
சிறு வயதில் நான் பார்த்ததுக்கு பின், இப்போது, பெங்களூரு எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்று பார்த்தால், ஆச்சரியமே மிஞ்சுகிறது. அந்த அளவிற்கு எல்லாவற்றிலும் மாறுதல்கள்; வளர்ச்சிகள்.
நான் பிறந்தது, பெங்களூரில் தான். அப்போதெல்லாம் சிட்டி மற்றும் கன்டோன்மென்ட் என்று, பெங்களூரை இரண்டாக பிரித்து வைத்திருந்தனர்.பெங்களூரின் சிட்டி பகுதியில், சாம்ராஜ்பேட்டை என்றொரு குடியிருப்பு பகுதி தான், எங்களுடையது.எனக்கு, நன்றாக நினைவிருக்கிறது. அங்கு, கோட்டை ஆஞ்சநேயர் கோவில் இருக்கும். அந்த ஆஞ்சநேயர் சுவாமியை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவ்வப்போது அந்த கோவிலுக்கு போய், என் வேண்டுதலை சொல்லிவிட்டு வருவேன்.
அவரும், நான் சொல்வதையெல்லாம் பேசாமல் கேட்டுக் கொண்டிருப்பார்.அன்றைக்கும் அந்த கோவிலுக்கு கூட்டிப் போனார், அம்மா. குளித்து, பட்டுப் பாவாடை சரசரக்க, இரட்டை ஜடை போட்டு, அம்மாவுடன் கோவிலுக்கு நடந்து சென்றது, இன்னமும் நினைவு இருக்கிறது.
ஆஞ்சநேயரிடம், 'என் மகளின் எதிர்காலம் நன்றாக இருக்கணும்...' என்று வேண்டிய அம்மா, அதையே அர்ச்சகரிடமும் கூறினார்.அந்த நேரம் பார்த்து, சுவாமி மேல் இருந்து, வலது பக்கம் ஒரு பூ உதிர்ந்தது.ஆஞ்சநேயரின் அருள் எங்களுக்கு கிடைத்து விட்டது என்பது புரிந்தது. அர்ச்சகர் ஆசீர்வதித்ததும், அம்மாவின் முகம் மலர்ந்தது.
இந்த இரண்டுமே இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது.அப்போது எனக்கு, 12 - 13 வயது இருக்கும். ஆனால், வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. பார்க்கிறவர்களுக்கு நம்ப முடியாத அளவு நான் வளர்ந்திருந்தாலும், அன்றைக்கு ரொம்பவும் அப்பாவியாகத்தான் இருந்தேன்.
உதிர்ந்த பூவை எடுத்து, அர்ச்சகர் எங்களிடம் தர, நான் அந்தப் பூவை வாங்கி, கண்களில் ஒற்றிக் கொண்டேன்.அந்த பூவையும் சரி, அதன் வாசனையையும் சரி, இன்றைக்கும் என்னால் உணர முடிகிறது.சிறு வயது முதலே, எனக்கு, பூக்கள் என்றால் உயிர். வீட்டிலும் நிறைய பூச்செடிகள் இருந்தன.
வீட்டிலிருந்த எல்லா பூக்களையும் பறித்து, சரமாக கொடுப்பது எனக்குப் பிடிக்கும்; அதை எனக்கு, ஜடையில் சூட்டி விடுவார், அம்மா. அப்போதிலிருந்தே எனக்கு, பூக்கள் என்றால் விருப்பம். சகோதரிகளுக்கும், என் தலையில், பூ வைத்துப் பார்ப்பதென்றால் ரொம்பப் பிரியம். மல்லிகை, சம்பங்கி பூக்களையெல்லாம் கடவுளுக்கு கட்டி, பூஜை செய்தால், நல்ல கணவன் வாய்ப்பான் என்பது, அப்போதைய நம்பிக்கையாய் இருந்தது.
அதைக் கேட்டு அப்படியே செய்து கொண்டிருந்தேன். அம்மாவும் தீவிர பக்தை. அம்மாவின் போக்குபடியே நானும் நடந்து கொண்டதால், அவருக்கு என் மீது இஷ்டம் அதிகம்.எங்க அம்மாவுக்கு நான், நான்காவது குழந்தை. ஏற்கனவே மூன்று பெண்கள் பிறந்திருந்ததால், நான்காவது, ஆணாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது, அம்மாவுக்கு.என் அம்மா, நிறை மாத கர்ப்பிணியாக இருந்தபோது, பக்கத்து வீட்டில், சத்யநாராயண பூஜை பிரமாண்டாக நடந்தது.
'சுடச்சுட நெய் போட்டு பிரசாதம் கொடுங்கள். அந்த அம்மாவுக்கு எல்லாம் நல்லபடியாக முடியும்...' என்று சொல்லி, ஒரு கிண்ணத்தில் பிரசாதம் கொடுத்துள்ளனர்.அதை பய பக்தியுடன் வாங்கி சாப்பிட்டுள்ளார், அம்மா. பிரசாதம் சாப்பிட்டதாலோ, என்னவோ பிரசவ வலி வந்து, பிரசவமும் நல்லபடியாக நடந்தது.சத்யநாராயண பூஜையின் பலனாக, நான்காவதாக ஆண் குழந்தை தான் பிறக்கும் என்ற எல்லார் நம்பிக்கைக்கும் மாறாக, நான் பிறந்தேன்.'இதென்ன நான்காவதும் பெண்ணாய் பிறந்து விட்டதே, எப்படி சமாளிக்கப் போகின்றனரோ...' என, பேசிக் கொண்டனராம்.
எங்க அம்மாவுக்கு, ஒரு பக்கம் ஏமாற்றமாய் இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், 'எப்போது, எந்தப் பிள்ளை என்று கடவுள் எழுதியிருக்கிறாரோ அதுதான் நடக்கும்...' என்று சொல்லி இருக்கிறார். ஆனால், என் தாத்தா தான், 'போனால் போகிறது, இந்தக் குழந்தையை யாருக்காவது கொடுத்து விடலாம்...' என்று, கொஞ்சம் வேறு மாதிரி சிந்தித்திருக்கிறார்.நல்லவேளை, அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை.பார்வதி, கமலா, சித்தலிங்காம்பிகா என்று, ஏற்கனவே மூன்று சகோதரிகள், நான்காவதாக, நான் சரோஜாதேவி.
ஆண் குழந்தை வேண்டுமென்று விரும்பியதாலோ என்னவோ, என்னை ஆண் பிள்ளை போலவே வளர்த்தனர்.சின்ன வயதில், எனக்கு கடுமையான ஜுரம் வந்ததாம். என்ன மருந்து கொடுத்தும், ஜுரம் தணியவில்லை.'எதுக்காக இந்தப் பொண்ணுக்கு இத்தனை மருந்து கொடுக்கிறீர்கள்... பேசாமல் இந்தப் பிள்ளையை யாருக்காவது கொடுத்து விடுங்கள்...' என்றாராம், தாத்தா.பின்னாளில் எனக்கு, 'பத்மஸ்ரீ' விருது கிடைத்த போது, 'ஐயோ, சின்ன வயதில் உன்னை யாருக்காவது கொடுத்து விடு என்று சொன்னேனே...' என்று, என்னை கட்டிப்பிடித்து அழுதார், தாத்தா.பள்ளிக்கு போகும் வயதில், என்னை செயின்ட் தெரசா கான்வென்டில் சேர்த்தனர். அந்த பகுதியிலுள்ள மிகவும் உயர்தரமான பள்ளி இது.சின்ன வயதிலிருந்தே கொஞ்சம் கூச்ச சுபாவமுள்ளவள், நான்; அம்மா பிள்ளை வேறு. அவர் என்ன ல்கிறாரோ, அதுதான் எனக்கு வேதம்.அம்மா எந்த உடை உடுத்தச் சொல்கிறாரோ, அதைத்தான் அணிந்து கொள்வேன். ஜடை கூட அப்படித்தான். அவர் எப்படி தலை அலங்காரம் செய்து கொள்ளச் சொல்கிறாரோ அப்படித்தான்.
என் கணவர், ஹர்ஷாவும் அப்படித்தான்.அம்மா என்ன சொல்கிறாரோ அதைத்தான் ஹர்ஷாவும் கேட்பார்; அப்படியே தான் நடந்து கொள்வார்.படங்களில் வரும், 'ஷாட்'களுக்கும் அம்மாதான், அத்தாரிட்டி.அம்மாவை துாரத்தில் உட்கார வைத்து, அவர் சரியென்று தலையசைக்கும், 'ஷாட்'களில் தான் எனக்கு சமாதானம். அவருக்கு ஒரு, 'ஷாட்' பிடிக்கவில்லை என்றால், இயக்குனரிடம் அதை நைச்சியமாக சொல்வேன்.'சார், இன்னைக்கு இந்த, 'ஷாட்' வேண்டாம். நாளைக்கு இதை வைத்துக் கொள்ளலாம். இன்றைக்கு வேறொரு, 'ஷாட்' போய்க்கலாம்...' என்று சொல்லி, வேறொரு, 'ஷாட்'டை எடுக்க வைப்பேன்.
— தொடரும் நன்றி: