dailythanthi.com , may 18 2013 

துருவ நட்சத்திரங்களின் நடுவில் ஒரு பருவ நட்சத்திரம்! (by வசன கர்தா ஆருதாஸ் ) 

நாடோடி மன்னனில் பானுமதி நடித்த அந்தப் பாத்திரத்திற்குப் பதிலாகப் புதியதோர் பாத்திரத்தைப் படைத்து, அதில் எந்த நடிகையை நடிக்க வைத்துப் படத்தை நிறைவு செய்வது என்ற சிந்தனையில் ஈடுபட்டார் எம்.ஜி.ஆர். தனது ஆலோசகரும், மரியாதைக்குரியவருமான கே.சுப்ரமணியத்தை அழைத்து அவருடைய கருத்தையும் கேட்டார். அவர், எம்.ஜி.ஆருக்கு உதவி புரியவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு அவருடைய கன்னட மொழி கச்சதேவயானியில் நடித்திருந்த சரோஜாதேவியைப் பரிந்துரைத்ததுடன் படத்தையும் போட்டுக்காட்டினார்.


கச்சதேவயானிக்கு முன்பாகவே சரோஜாதேவி காளிதாஸ் என்ற படத்தில் அறிமுகமாகி நடித்திருந்தார். அதுதான் அவருடைய முதல் படம் ஆகும். பிரபல கன்னட நடிகரும், கர்நாடக சங்கீத வித்துவானும் தயாரிப்பாளருமான ஸி.ஹொன்னப்பா பாகவதரின் படம் தான் இந்த காளிதாஸ்.

கே.சுப்ரமணியம் எடுத்திருந்த கச்சதேவயானி படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆருக்கு சரோஜாதேவியைப் பிடித்துப்போகவே, அவரை ஒப்பந்தம் செய்துகொண்டு நாடோடி மன்னன் படப்பிடிப்பைத் தொடர்ந்தார். சரோஜாதேவியின் அதிர்ஷ்ட காலம் ஆரம்பமாகி விட்டது! அதற்கு அறிகுறியாக அவர் சம்பந்தப்பட்ட பிற்பகுதிக் காட்சிகளை கேவா கலரில் எம்.ஜி.ஆர். படமாக்கினார். கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே என்று எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் பாடும் அந்த டூயட் பாடலை அவர் அற்புதமாகப் படமாக்கிக் காட்டினார்.


அப்பொழுதெல்லாம் ஈஸ்ட்மேன் கலர் பிலிம் வரவில்லை. அதனால்தான் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ அதிபரும், டைரக்டருமான டி.ஆர்.சுந்தரம் தனது அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தை கேவா கலரில் தயாரித்தார். 1956&ல் வெளிவந்து வெற்றி பெற்ற அந்தப் படம்தான் முழுவதுமாக கேவா கலரில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் படம் ஆகும். அப்பொழுது டி.ஆர்.சுந்தரம் பேட்டி கொடுத்து பத்திரிகையில் வந்த அந்தச் செய்தி இன்னும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர் கூறியது இதுதான்: எம்.ஜி.ஆரும், பானுமதியும் இயற்கையாகப் பெற்றிருக்கும் உடல் கலருக்காகத்தான் என் முதல் கலர் படத்தில் அவர்களை நடிக்க வைத்தேன். அவர் கூறியது முற்றிலும் உண்மை. எம்.ஜி.ஆர். எலுமிச்சம்பழ நிறம் என்றால், பானுமதி இளம் மஞ்சள் நிற மேனி கொண்டவர். அதன் காரணமாகத்தான் அந்நாட்களில் அவர்களது ஜோடிப் பொருத்தம் அவ்வளவு அழகாக அமைந்தது என்பேன்.


முதல் படமான நாடோடி மன்னன், அதை அடுத்து திருடாதே, மாடப்புறா ஆகிய மூன்று படங்களுக்குப்பிறகு, எம்.ஜி.ஆருக்கு முதன் முதலாக நான் கதை வசனம் எழுதிய தேவர் பிலிம்சின் வெற்றிப்படமான தாய் சொல்லைத் தட்டாதே படத்திலிருந்துதான் சரோஜாதேவி & எம்.ஜி.ஆர். இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம் ஏற்பட்டு காதல் காட்சிகளில் நடித்து, இளைஞர்களின் இதயங்களைத் தங்கள் வசம் இழுத்து அவர்களை மகிழ்வித்தனர்.


சரோஜாதேவியுடன் ஜோடி சேர்ந்த போது அவருடனான காதல் காட்சிகளில் எம்.ஜி.ஆர். நெருக்கமாக நடிக்கத் தொடங்கினார். ஹீரோ, ஹீரோயினுக்குள் நடிப்புக்கு அப்பாற்பட்டு ஒரு பிடிப்பு இல்லாவிட்டால், அவர்கள் சினிமாவில் நடிக்கும் காதல் காட்சிகள் செயற்கையாக & டிக்காக்ஷன் குறைந்த காபி போல சுவை குறைவாக இருக்கும்! ரசிகர்களிடம் எடுபடாது.


1959&66 காலக்கட்டத்தில் தான் சரோஜாதேவியின் பருவமேனியில் மெருகு கூடி பளபளத்தது! மழை மேகங்கண்ட மயில் போல அவர் அழகுத்தோகை விரித்து ஆடினார்! களையும் இளமையும் கைகோர்த்துக் கொண்டு அவருடைய அந்தக் கவர்ச்சியைச் செழிக்கச் செய்தது. அத்துடன் புகழும், செல்வமும் சேர்ந்து அவருக்குப் பூரிப்பைக் கொடுத்தது! பொதுவாகவே, புகழுக்கும், பொருளுக்கும் ஒரு பூரிப்பு உண்டு. அது அழகையும், ஆரோக்கியத்தையும் அள்ளிக் கொடுக்கும்!


சரோஜாதேவியின் பளிச் சென்று ஒளிவீசும் பவுர்ணமி முழு நிலா முகத்தில், அந்த அகன்ற கண்களும், அழகிய முத்துச்சரப் பற்களும் இயற்கை அவருக்கு வழங்கிய நன்கொடை! அதனால்தான் ஒளிப்பதிவாளர்கள் அவரது முகத்தை அவ்வளவு அழகாகப் படம் பிடித்துக் காட்டினார்கள்!


அழகு வேறு! - கவர்ச்சி வேறு! இரண்டுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. அழகு வணங்க வைக்கும்! கவர்ச்சி தொடத்தூண்டும்! இதற்கு எடுத்துக்காட்டு, சாவித்திரி, சரோஜாதேவி! சாவித்திரியிடம் குடும்பப்பாங்கான ஓர் அழகைக் கண்டேன்! சரோஜாதேவியிடம் அழகுடன்கூட ஆளை மயக்கும் கவர்ச்சியைக் கண்டேன்!


சரோஜா என்னும் பெயரில் இரண்டு மலர்கள் இருக்கின்றன! சரோஜா என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு தாமரை என்று பொருள். சரோஜாவின் முதல் எழுத்தான சவை நீக்கிவிட்டால் அது ரோஜா என்று ஆகிவிடும்! இது சரோஜாதேவிக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கலைக்கு ரசனை மிக முக்கியம். ரசிக்கத் தெரியாதவன் சிறந்த சிருஷ்டிகர்த்தாவாக முடியாது. பத்தோடு பதினொன்றாக இருப்பார்களே தவிர முத்தோடு மாணிக்கமாக முடியாது. கம்பனின் ரசனையில் பிறந்தவள் சீதை! காளிதாசனின் ரசனையில் உருவானவள் சகுந்தலை! ரசித்தால் பசிக்கும்! பசித்தால் புசிக்கலாம். ஒரு படைப்பாளிக்கு முதல் மூலதனமே ரசனை தான். அதன் விளைவுதான் கற்பனை.


51 ஆண்டுகளுக்கு முன்பு 1962-ல் நான் கதை & வசனம் எழுதிய தேவர் பிலிம்ஸ் தாயைக்காத்த தனயன் படத்தில் எம்.ஜி.ஆர். & சரோஜாதேவி நடிக்கும் முதல் இரவு காட்சியன்று வரும். அதில் சரோஜாதேவி பேரைச்சொல்லலாமா கணவன் பேரைச் சொல்லலாமா என்ற பாட்டைப்பாடி ஆடுவார். அந்தப்பாட்டின் எடுப்பிற்கு இணைப்பாக இருவரும் மாறி மாறிக் கேள்வியும் பதிலுமாக வசனம் பேசுவார்கள். அந்தக் காட்சியைப் பார்த்தால் அதில் என் காதல் கைவண்ணம் தெரியும்.


1963&ல் அன்னை இல்லம் படத்தில் சிவாஜி&தேவிகாவுடன் வீணையை வைத்துக்கொண்டு சரி கம பதநி என்னும் சப்த ஸ்வர ஏழு எழுத்துக்களுக்கும் ஒரு காதல் விளக்கம் கொடுப்பார். அதில் காதல் பற்றிய எனது புதிய கற்பனையைக் கேட்கலாம். அது என் இளமையின் எழுச்சியில் பிறந்தது!


1966&ல் தேவர் பிலிம்ஸ் தனிப்பிறவி படத்தில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவிடம் கடிகாரத்தில் உள்ள சிறிய முள், பெரிய முட்களை ஒப்பிட்டு காதல் கலந்த ஒரு வசனம் பேசுவார். அது என் இளம் வயதுக் கற்பனையில் உருவான இனிய காதல் உணர்வுகள்!


50 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். - சரோஜாதேவி நடித்து நான் வசனம் எழுதிய ஏவி.எம். அன்பே வா! சிவாஜிசரோஜாதேவி நடித்து நான் வசனம் எழுதிய சிவாஜி பிலிம்ஸ் புதிய பறவை. இவை இரண்டுமே காதல் காவியங்கள்! அந்த நாட்களில் எனக்குத் தெரியவில்லை. இன்றைக்கு அந்த இரண்டு படங்களையும் நான் பார்க்கும்போதும் வெவ்வேறு இரு வசனகர்த்தாக்கள் எழுதியது போல் வேறுபட்டு இருப்பதைப் பார்த்து நானே வியந்து போகிறேன். அந்த அளவிற்கு நான் எம்.ஜி.ஆரோடு எம்.ஜி.ஆராகவும் & சிவாஜியோடு சிவாஜியாகவும் ஐக்கியமாகி இருந்து அவர்களுக்காக எழுதியிருக்கிறேன்.


இப்பொழுது மீண்டும் சரோஜாதேவியிடமே வருகிறேன். 1959-ல் அதுவரையில் கதை & வசனகர்த்தாவாக மட்டுமே இருந்த ஸ்ரீதர் முதன் முதலாக இயக்கிய Òகல்யாணப்பரிசுÓ படத்தில்தான் சரோஜாதேவி கூடப்பிறந்த அக்காவுக்காக தன் காதலைத் தியாகம் செய்யும் அருமையான குணச்சித்திரப் பாத்திரத்தில் தோன்றி அற்புதமாக நடித்து அதன் மூலம் முழு நிறைவு பெற்ற ஒரு நல்ல நடிகையாகி உயர்ந்தார்.


அதே சமயத்தில்தான் நான் முதன் முதலாக கதை&வசனம் எழுதிய தேவர் பிலிம்ஸ் வாழ வைத்த தெய்வம் படத்தில் அதே ஜெமினிகணேசனுடன் கதாநாயகியாக நடித்தார். என்னுடைய அந்த முதல் கதை&வசனப் படத்தில்தான் முதன் முதலாக அவரை நான் சந்தித்தேன். ஸ்ரீதர் தன் கல்யாணப்பரிசு படத்தில் சரோஜாதேவியை மிக அழகாகச் செதுக்கிக் காட்டினார்! அது பெரும் வெற்றி பெற்று வெள்ளி விழாப் படமாக அமைந்து ஸ்ரீதருக்கும், சரோஜாதேவிக்கும் புகழ் கொடுத்தது.


அதை அடுத்து சரோஜாதேவி சிவாஜியுடன் சேர்ந்து நடித்து 1960&ல் வெளிவந்த Òவிடிவெள்ளிÓ படத்தை ஸ்ரீதர் இயக்கினார். அதன் பிறகு ஸ்ரீதர் இயக்கிய எந்தப் படத்திலும் சரோஜாதேவி நடிக்கவில்லை.


1961-ல் ஸ்ரீதர் சித்ராலயா என்னும் சொந்தப்பட நிறுவனம் தொடங்கி ஜெமினியோடு வைஜயந்திமாலாவை நடிக்க வைத்தார். அந்தப் படம்தான் தேன் நிலவு. 1959-ல் சரோஜாதேவி என்னும் சிலையைச் செதுக்கிய அதே ஸ்ரீதர், 1965&ல் தனது Òவெண்ணிற ஆடைÓ படத்தில் இன்னொரு எழிற்சிற்பத்தையும் வண்ணத்தில் வடித்துக்காட்டினார். அவர்தான் செல்வி ஜெயலலிதா! அப்போது அவருக்கு 16 வயது! சரோஜாதேவி! ஜெயலலிதா! இந்த இரண்டு எழிற்சிற்பங்களும் இறுதியில் எம்.ஜி.ஆரின் கலைக்கூடத்தில்தான் சேர்ந்து இடம் பெற்றுப் பெயரும் புகழும் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.


உருவத்திலும், உயரத்திலும் களையிலும் கவர்ச்சியிலும் எம்.ஜி.ஆருக்கு சரோஜாதேவியும், ஜெயலலிதாவும் பொருந்தியது போல வேறு யாரும் அவ்வளவாகப் பொருந்தவில்லை. அதனால்தான் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி 26 படங்களும், ஜெயலலிதா 28 படங்களும் நடித்துச் சாதனை புரிந்தனர். இவ்விருவருக்கும் ஏற்றாற்போல எம்.ஜி.ஆர். தனது ஒப்பனையையும், உடைகளையும் ஒழுங்காகவும், அழகாகவும் அமைத்துக்கொண்டு அந்த ராணிகளுக்கேற்ற ராஜாவாகத் திரைப்படங்களில் திகழ்ந்தார்!


எந்த தேவர் பிலிம்சில் 1958&ல் தன் 16&17&வது வயதில் சரோஜாதேவி என் முதல் படமான வாழ வைத்த தெய்வத்தில் கதாநாயகியாக நடித்தாரோ& அதே தேவர் பிலிம்சில், அதே 16, 17&வது வயதில் செல்வி ஜெயலலிதா 1966&ல் நான் வசனம் எழுதிய தனிப்பிறவி படத்தில் எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக நடித்தார்!


 எந்த இடத்திற்கு எவர் எப்போது எப்படி வருவார் என்பது, வாழ்க்கையில் நாம் தொகுத்துக் கொள்வது அல்ல. வானத்தில் அது ஏற்கனவே வகுத்து வைக்கப்பட்டிருக்கிறது. அதிசயங்கள் (Miracles) மண்ணில் நடப்பதை விட, விண்ணில்தான் அதிகமாக நிகழ்கின்றன. ஏனெனில் அங்குதான் சூரியனும் சந்திரனும், கோடிக்கணக்கான நட்சத்திரங்களும், கோள்களும் இருக்கின்றன. அந்த வெளிச்சத்தில் இறைவன் இருக்கிறான்.