கணவர் இறந்தபின், சுமார் 8 ஆண்டு காலம் சரோஜாதேவி படங்களில் நடிக்கவில்லை. பின்னர் பலரும் வற்புறுத்திக் கேட்டதால், 1988-ல் பூவுக்குள் பூகம்பம், அடிமை விலங்கு, பரம்பரை, தாய்மேல் ஆணை, பொன்மனச் செல்வன், ஒரே தாய் ஒரே குலம் ஆகிய படங்களில் நடித்தார்.
1997 ஜுலை 4-ல் வெளிவந்த 'ஒன்ஸ்மோர்' புதுமையான கதை அமைப்பைக் கொண்டது. 'இருவர் உள்ளம்' படத்தில், சிவாஜிகணேசனும், சரோஜாதேவியும் எலியும், பூனையும் போல் வாழ்க்கை நடத்துகிறவர்கள். அந்தப் பகுதியை வைத்துக்கொண்டு, புதிதாக கதை பின்னப்பட்டது. பிரிந்து வாழும் அவர்களை, இளம் ஜோடிகளான விஜய்யும், சிம்ரனும் சேர்த்து வைப்பது போல் கதையை அமைத்து, அந்தப் புதிய பகுதியை சிவாஜிகணேசனையும், சரோஜாதேவியையும் நடிக்கச் செய்து படமாக்கினர். இந்தப்படம், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, வெற்றிகரமாக ஓடியது. இந்தப்படத்தை டைரக்டர் சி.வி.ராஜேந்திரன் தயாரித்தார். நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்ட் செய்தார். சரோஜாதேவி கடைசியாக நடித்த படம் 'ஒன்ஸ்மோர்.'
அவர் நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கை 167. (தமிழ் 85; கன்னடம் 44; தெலுங்கு 27; இந்தி 11.) சரோஜாதேவி மலையாளப் படம் எதிலும் நடிக்கவில்லை! இதுபற்றிக் கேட்டதற்கு, 'அந்தக் காலத்தில், மலையாள படங்களில் நடிகைகள் `முண்டு' எனப்படும் துண்டு மட்டும் அணிந்து நடிப்பார்கள். எனவே, எனக்கு அழைப்புகள் வந்தும் மலையாளப் படங்களில் நடிக்க நான் சம்மதிக்கவில்லை' என்று சரோஜாதேவி பதில் அளித்தார். சரோஜாதேவிக்கு ஒரு மகள்; ஒரு மகன். மகள் பெயர் இந்திரா. 25 வயது ஆகிறது. அமெரிக்காவில் படிக்கிறார். மகன் பெயர் ராமச்சந்திரன். வயது 23. நிர்வாகத்தில் சரோஜாதேவிக்கு உதவியாக இருந்து வருகிறார்.
தற்போது பெங்களூரில் வசித்து வரும் சரோஜாதேவி, தன் திரை உலக வாழ்க்கை பற்றி கூறியதாவது:- 'நான் சினிமாவை நேசித்தேன். சினிமா என்னை நேசித்தது. நான் தமிழ்நாட்டில் புகழ் பெறுவதற்குக் காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அவர் என் தெய்வம். என்னை வாழவைத்த தமிழ்நாட்டையும், தமிழ் ரசிகர்களையும் நான் ஒரு போதும் மறக்கமாட்டேன். தமிழ் நாட்டை என் தாயாக மதிக்கிறேன். தமிழ்நாட்டு மக்களை என் உடன் பிறந்த சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும் கருதுகிறேன். அவர்கள் காட்டிய அன்புக்கு அளவே இல்லை. அதற்கு ஈடு இல்லை; இணை இல்லை. எனக்கு ஆதரவளித்த பட அதிபர்கள், டைரக்டர்கள், கதை- வசன ஆசிரியர்கள், சக நடிகர் -நடிகைகள், என் மீது தொடர்ந்து அன்பு காட்டி வரும் தமிழ் நாட்டு ரசிகர்கள் ஆகிய அனைவருக்கும் என் அன்பையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.' இவ்வாறு சரோஜாதேவி கூறினார்.