maalaimalar.com/2012/02/22

குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்தார்

சிவாஜிகணேசனும், பத்மினியும் இணைந்து நடித்து, பல அற்புதமான படங்களை தந்தனர். தமிழ்த்திரை உலகின் இணையற்ற ஜோடி என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டனர். 1954-ம் ஆண்டில் சிவாஜியும், பத்மினியும் பல படங்களில் இணைந்து நடித்தனர். பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பான 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' நகைச்சுவைப் படம். இதில் சிவாஜியும், பத்மினியும் ஜோடியாக நடிக்க, முக்கிய வேடத்தில் ராகினி நடித்தார்.

அவருக்கு ஜோடி டி.ஆர்.ராமச்சந்திரன். இப்படத்தில் 'வெண்ணிலாவும் வானும் போல...' என்ற பாரதிதாசன் பாடலை எம்.எல். வசந்தகுமாரி அருமையாக பாடினார். ராகினி பாடுவது போல அந்த பாடல் காட்சி படத்தில் இடம் பெற்றது. 1954-ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றான 'தூக்குத்தூக்கி'யில் சிவாஜியுடன் லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரும் நடித்தனர். 'கொலையும் செய்வாள் பத்தினி' என்ற தத்துவத்தை உள்ளடக்கிய கதை. இதில் கணவனுக்கு 

(சிவாஜி) துரோகம் செய்யும் மனைவியாக லலிதா நடித்தார். இறுதியில் சிவாஜியை மணக்கும் ராஜகுமாரி -பத்மினி. இந்தப் படத்தில், 'குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்' என்ற பாடலுக்கு சிவாஜி, பத்மினி, ராகினி ஆகிய மூவரும் ஆடும்போது, ரசிகர்களின் ஆரவாரம் தியேட்டரையே குலுங்கச் செய்துவிடும். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான 'இல்லறஜோதி'யில் சிவாஜியும், பத்மினியும் நடித்தனர். இதில் சிவாஜி சலீமாகவும், பத்மினி அனார்கலியாகவும் நடித்த ஓரங்க நாடகம் பிரமாதமாக அமைந்தது. 1954 கடைசியில் வெளியான சரவண பவாïனிட்டி தயாரிப்பான 'எதிர்பாராதது', சிவாஜி, பத்மினி இருவரின் திறமைக்கும் சவாலாக அமைந்த படம். இப்படத்தின் கதை- வசனத்தை ஸ்ரீதர் எழுதியிருந்தார். இதில் சிவாஜியும், பத்மினியும் காதலர்கள். ஆனால் விபத்து காரணமாக சிவாஜி அடையாளம் தெரியாத இடத்தில் சிக்கிக் கொள்ள, பத்மினிக்குத் திருமணம் நடந்து விடுகிறது. அவர் திரும்பி வரும்போது, பத்மினி சித்தி ஸ்தானத்தில் இருக்கிறார். உணர்ச்சிப் போராட்டங்கள் நிறைந்த கதை. கதையின் `கிளைமாக்ஸ்' எப்படி இருக்குமோ என்று ரசிகர்கள் மனம் திக் திக் என்று அடித்துக்கொள்ள, நமது பண்பாட்டிற்கு ஏற்றபடியே கதை முடிகிறது. இறுதிக் கட்டத்தில் 'சிற்பி செதுக்காத பொற்சிலையே' என்ற பாடலை சிவாஜி பாடிக்கொண்டிருக்க, கொட்டும் மழையில் பத்மினி ஓடி வருவார். அவரை கட்டித்தழுவ சிவாஜி முயலும்போது, பத்மினி அவரை அடித்து நொறுக்குவார். மெய் சிலிர்க்கச் செய்யும் கட்டம்

அது. சிவாஜிகணேசன் பலதரப்பட்ட படங்களில் நடித்து, நடிப்பின் இமயமாக உயர்ந்து கொண்டே போனார். இதனால் அவர் பானுமதி, சாவித்திரி, வைஜயந்திமாலா போன்ற நடிகைகளுடனும் நடிக்க நேரிட்டது. இதேபோல்,பத்மினியின் புகழும் உயர்ந்து கொண்டே போயிற்று. அதனால் எம்.ஜி.ஆர்., ஜெமினிகணேசன் ஆகியோருடனும் சில படங்களில் இணைந்து நடித்தார்.

எனினும் சிவாஜி- பத்மினி ஜோடிக்கே ரசிகர்களின் பெரும் வரவேற்பு கிடைத்தது. 1955 ஆகஸ்டில் வெளிவந்த 'மங்கையர் திலகம்' பத்மினியின் மிகச்சிறந்த நடிப்பைக் கொண்ட அருமையான படமாகும். இதில் பத்மினி, எஸ்.வி.சுப்பையாவின் மனைவியாக -அதாவது சிவாஜியின் அண்ணியாக நடித்தார். பல படங்களில் சிவாஜியும், பத்மினியும் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. சிவாஜியின் அண்ணியாக பத்மினி நடிப்பதை ரசிகர்கள் ஏற்பார்களா? என்று, பட உலகத்தினர் சந்தேகப்பட்டனர். ஆனால் கதையின் வலிமை, சிவாஜி- பத்மினியின் நடிப்பு, வலம்புரி சோமநாதனின் வசனம், எல்.வி. பிரசாத்தின் டைரக்ஷன் ஆகியவற்றால், படம் `சூப்பர் ஹிட்' ஆகியது. ஒப்பற்ற அழகால் ரசிகர்களை கவர்ந்திருந்த பத்மினி, அருமையான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கக் காரணமான படம் 'மங்கையர் திலகம்.' லலிதா நடித்த படங்களில் சிறந்தவை 'தேவதாஸ்', 'கணவனே கண்கண்ட தெய்வம்' ஆகியவையாகும். 'தேவதாஸ்' படத்தில், ஏ.நாகேஸ்வரராவும், சாவித்திரியும் அற்புதமாக நடித்தனர். அத்தகைய படத்தில் தாசி சந்திரமுகி வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்து பெயர் பெற்றார், லலிதா. 'கணவனே கண்கண்ட தெய்வம்' படத்தில், ஜெமினிகணேசனை காதலித்து தோல்வி அடையும் நாக தேவதை வேடத்தை கச்சிதமாக செய்திருந்தார்மயக்க