ஒரே நேரத்தில் எம். ஜி. ஆர். படங்களுக்கும் சிவாஜி படங்களுக்கும் வசனம் எழுதிய ஒரே வசனகர்த்தா நானாகத்தான் இருக்க வேண்டும். 1962 ஆம் ஆண்டு ஒரே நாளில் நான் வசனம் எழுதிய எம். ஜி. ஆரின் ‘தாயைக் காத்த தனயன்’ படமும் சிவாஜியின் ‘படித்தால் மட்டும் போதுமா’ படமும் ரிலீஸானது. ஒன்று தேவர் படமும் இன்னொன்று ரெங்கநாதன் பிக்சர்ஸ் படமுமாக இருந்த போதிலும், முறையே ஒன்றை எம். ஜி. ஆர். பிக்சர்ஸ¤ம், இன்னொன்றை சிவாஜி ஃபிலிம்ஸ¤ம் சென்னை நகரில் வெளியிட்டிருந்தார்கள். இரண்டுமே சூப்பர் வெற்றியடைந்து 100 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. மவுண்ட்ரோடு ஏரியாவில் பிளாசாவில் தாயைக்காத்த தனயனும், மிட்லண்டில் படித்தால் மட்டும் போதுமாவும் ரசிகர்கள் கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருந்தன.
அன்று காலை எம். ஜி. ஆரின் அடுத்த படத்துக்காக வசனம் எழுதச் சென்றிருந்தபோது எம். ஜி. ஆர். என்னை அழைத்து, ‘போன படம் வெற்றியடைஞ்சதுக்கு உனக்கு எந்த பரிசும் நான் கொடுக்கலை. இப்போ தாயைக்காத்த தனயன் பெரிய வெற்றியடைஞ்சிருக்கு, உனக்கு என்ன பரிசு வேணும்?’ என்று கேட்க, ‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்னே, உங்க அன்பு இருந்தா போதும்’ என்றேன். ‘அப்படியா அப்போ நானே ஏதாவது பண்றேன்’ என்று சொல்லிவிட்டார்.
அன்று பிற்பகல் சிவாஜி பட ஷ¥ட்டிங் போனபோது அவர் என்னை தனியே அழைத்து, ‘ஆரூரான், இதற்கு முந்தி நீ எழுதின பாசமலர் பெரிய வெற்றியாச்சு. அதுக்கு நான் பரிசு எதுவும் தரலை. இப்போது நீ எழுதின படித்தால் மட்டும் போதுமாவும் நல்லா ஓடிக்கிட்டிருக்கு. உனக்கு என்ன பரிசு வேணும் சொல்லு. அண்ணன் கிட்டே இருந்தா தர்ரேன். இல்லேன்னா வாங்கித் தர்ரேன்’ என்று கேட்டதும் நான் ஆடிப் போனேன். அதெப்படி அவர்கள் இருவரது மனதிலும் ஒரே மாதிரி எண்ணம் ஓடுதுன்னு ஆச்சரியப்பட்டேன். எம். ஜி. ஆருக்கு சொன்ன அதே பதிலையே இவருக்கும் சொன்னேன். ‘அன்புதான் நிறைய இருக்கே, வேறென்ன வேணும்?’ என்றார் நான் ஒண்ணும் சொல்லவில்லை. இரண்டு நாள் கழித்து எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்தில் இருந்து போன் பண்ணி வரச்சொன்னாங்க. போனபோது எம். ஜி. ஆர். இருந்தார். ஒரு பெரிய வெள்ளித் தட்டில் நான்கு மூலைகளிலும் சிறிய தங்கத் தகடுகள் பொருத்தியிருக்க, தட்டின் நடுவில் ‘எம்ஜியார் பிக்சர்ஸ் தாயைக் காத்த தனயன் வெற்றிக்கு ஆரூர்தாஸ¤க்கு அன்பளிப்பு’ என்று பொறிக்கப்பட்டிருந்த அந்த தட்டை எம். ஜி. ஆர். வழங்கினார்.
மறுநாள் பிற்பகல் சிவாஜி பிலிம்ஸிலிருந்து அழைப்பு வந்தது. போனால் அங்கே சிவாஜி மூன்றரை சவரன் எடையுள்ள, உள்ளங்கையை விட அகலமான தங்கப் பதக்கம் ஒன்றை எனக்கு அணிவித்தார். அதில் ‘சிவாஜி பிலிம்ஸ் படித்தால் மட்டும் போதுமா 100 வது நாள் வெற்றி விழா’ என்று சிவாஜி பிலிம்ஸ் எம்ப்ளத்துடன் பொறிக்கப்பட்டிருந்தது. அவ்விரண்டு பரிசுகளையும் என் வீட்டு வரவேற்பறை ஷோகேஸில் பக்கம் பக்கமாக வைத்திருக்கிறேன். அவற்றைப் பார்க்கும் போது அந்தப் பரிசுகளைவிட அவ்விரண்டு மேதைகளின் முகம் தான் என் கண்களில் காட்சியளிக்கும்.