எம்.ஜி.ஆர் சரோஜாதேவி ஜோடி ரசிகர்கள் மிகவும் விரும்பினர்

சின்னப்ப தேவருடன் மீண்டும் நட்புறவு ஏற்பட்டதும், அவர் படங்களில் எம்.ஜி.ஆர். தொடர்ந்து நடிக்கலானார். ஒரு படத்துக்கு கொடுக்க வேண்டிய பணத்தை எம்.ஜி.ஆருக்கு மொத்தமாகக் கொடுத்து விடுவது தேவரின் வழக்கம். அத்துடன், அடுத்த படத்துக்கும் "அட்வான்ஸ்" கொடுத்து விடுவார்! இதனால், தேவர் பிலிம்ஸ் எடுக்கும் படம் ஒன்றில் எம்.ஜி.ஆர். தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பார். தேவர், இடையிடையே வேறு நடிகர்_ நடிகைகளை வைத்து பக்திப் படங்களும் எடுப்பார். இதற்கு முன்பெல்லாம், வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களில் மட்டும் நடித்து வந்த எம்.ஜி.ஆர்., 1962 முதல் ஐந்து அல்லது ஆறு படங்களில் நடிக்கத் தொடங்கினார். 1962_ல் "ராணி சம்யுக்தா", "மாடப்புறா", "தாயைக் காத்த தனயன்", "குடும்பத் தலைவன்", "பாசம்", "விக்ரமாதித்தன்" ஆகிய 6 படங்களில் நடித்தார். அதாவது 2 மாதங்களுக்கு ஒரு படம்!

மேற்கண்ட 6 படங்களில் "மாடப்புறா", "பாசம்" தவிர மற்ற படங்கள் வெற்றிப்படங்கள். பி.வள்ளிநாயகம் என்பவர் "பி.வி.என்" புரொடக்ஷன்ஸ் என்ற படக்கம்பெனியைத் தொடங்கித் தயாரித்த படம் "மாடப்புறா". நாராயணசாமி என்பவர் வசனம் எழுத, எஸ்.ஏ.சுப்பு ராமன் டைரக்ட் செய்தார். எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி நடித்த இந்தப்படம் ஓடாததற்குக் காரணம், கதை அம்சம் சரி இல்லாததுதான். "பாசம்" படத்தை தயாரித்து இயக்கியவர் டி.ஆர். ராமண்ணா. எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி, ஷீலா நடித்த இந்தப்படம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், எம்.ஜி.ஆர். இறந்து விடுவது போல படத்தை முடித்திருந்தார்கள். எம்.ஜி. ஆர். ரசிகர்கள் இதை ஏற்பார்களா? எம்.ஜி.ஆர். படத்தை பத்துப் பதினைந்து முறை பார்க்கும் அவரது ரசிகர்கள், ஒரே தடவையுடன் நிறுத்திக் கொண்டார்கள்! படம் சரியாக ஓடவில்லை.

 

இன்னொன்றை கவனிக்க வேண்டும். எம்.ஜி. ஆர். படங்களில் சில படங்கள் 100 நாள் வரை ஓடாவிட்டாலும், அது தோல்விப்படம் என்று அர்த்தமல்ல. மற்ற எம். ஜி.ஆர். படங்களைவிட வசூலில் குறைவாக இருக்கலாமே தவிர, பட அதிபர்களுக்கோ, விநியோகஸ்தர்களுக்கோ நஷ்டத்தை ஏற்படுத்தி விடாது. "யானை படுத்தால் குதிரை மட்டம்" என்று கூறுவதுபோல், நஷ்டம் ஏற்படாத அளவுக்கு வசூலித்துக் கொடுத்துவிடும்.

"தாயைக் காத்த தனயன்", "குடும்பத் தலைவன்" இரண்டும் தேவர் பிலிம்ஸ் தயாரித்த படங்கள். எம்.ஜி.ஆரை வைத்து ஒரே ஆண்டில் இரு படங்களைத் தயாரித்தவர் தேவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். இரண்டு படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜாதேவி. இரண்டு படங்களுக்கும் வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ்; இரண்டு படங்களையும் டைரக்ட் செய்தவர் தேவரின் தம்பி எம்.ஏ.திருமுகம். இரு படங்களுமே வெற்றிப் படங்கள்.

"ராணி சம்யுக்தா", ஏ.சி.பிள்ளையின் "சரஸ்வதி பிக்சர்ஸ்" தயாரிப்பு. எம்.ஜி.ஆரும், பத்மினியும் இணைந்து நடித்தனர். யோகானந்த் டைரக்ட் செய்தார். வசனங்களை கண்ணதாசன் எழுதினார். இசை: கே.வி.மகாதேவன். ஏற்கனவே பி.யு.சின்னப்பா _ஏ.சகுந்தலா நடித்த "பிருதிவிராஜன்" படத்தின் கதைதான் "ராணி சம்யுக்தா." சின்னப்பா வின் படம் கூட, சுமாரான வெற்றியைத்தான் பெற்றது. எம்.ஜி. ஆரின் "ராணி சம்யுக்தா" வெற்றிப்படமாக அமைந்தாலும் "சூப்பர் ஹிட்" படம் அல்ல.ஜெயபாரத் புரொடக்ஷன்ஸ் அதிகப்பொருட்செலவில் தயாரித்த படம் "விக்ரமாதித்தன்". டி.ஆர்.ரகுநாத்தும், என்.எஸ்.ராமதாசும் இணைந்து டைரக்ட் செய்த படம். இசை: ராஜேஸ்வராவ். இதில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக பத்மினி நடித்தார்.

இந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவியும், சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக பத்மினியும், ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக சாவித்திரியும் நடித்து வந்தனர். இந்த ஜோடிப் பொருத்தத்தை ரசிகர்கள் மிகவும் விரும்பினர். படங்கள் மிக நன்றாக ஓடின. ஆனால், ஜோடி மாற்றத்தை ஏனோ ரசிகர்கள் விரும்பவில்லை. ஜோடி மாற்றப்பட்ட படங்கள், அவை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், எதிர்பார்த்ததற்கு சற்று குறைவாகவே ஓடின! அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டிய படம் "விக்ரமாதித்தன்"!