"எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுத்தால், படம் தோல்வி அடையாது; லாபம் கிடைப்பது நிச்சயம்" என்ற எண்ணத்தை, பட அதிபர்களிடையே "மதுரை வீரன்" ஏற்படுத்தியது. அதனால் அவரை வைத்துப் படம் எடுக்க பட அதிபர்கள் போட்டி போட்டனர். `கால்ஷீட்' வாங்க, எம்.ஜி.ஆர். வீட்டில் பெரும் கூட்டம்! நல்ல கதை, நல்ல தயாரிப்பாளர், போதிய பண வசதி _ இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்துத்தான் படங்களை எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டார். எம்.ஜி.ஆருக்கும், "சாண்டோ" சின்னப்ப தேவருக்கும் "ராஜகுமாரி" காலத்தில் இருந்தே நட்புறவு உண்டு. எம்.ஜி.ஆருடன் சண்டை போடும் காட்சிகள் பலவற்றில் தேவர் நடித்திருக்கிறார். அவர் "தேவர் பிலிம்ஸ்" என்ற படக்கம்பெனியைத் தொடங்கினார்.
இந்த கம்பெனியின் முதல் படம் "தாய்க்குப்பின் தாரம்". இதில் நடிக்கவேண்டும் என்று எம்.ஜி.ஆரிடம் தேவர் கேட்டுக் கொண்டார். நண்பருக்கு உதவ, எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். இப்படத்தில், எம்.ஜி.ஆருக்கு ஜோடி பானுமதி. மற்றும் டி.எஸ்.பாலையா, பி.கண்ணாம்பா ஆகியோரும் நடித்தனர். சின்னப்பதேவரின் தம்பி எம்.ஏ.திருமுகம், ஜ×பிடர் பிக்சர்சில் எடிட்டராகப் பணியாற்றி, அனுபவம் பெற்றவர் "மனோகரா" படத்திற்கும் எடிட்டராக பணியாற்றி புகழ் பெற்றார். "தாய்க்குப்பின் தாரம்" டைரக்ஷன் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார், தேவர்.
"மதுரை வீரன்" வெளிவந்து 5 மாதங்களுக்குப்பின் 21_9_1956_ல் "தாய்க்குப்பின் தாரம்" வெளிவந்து, வெற்றிப்படமாக அமைந்தது. இதில், ஒரு முரட்டுக்காளையுடன் எம்.ஜி.ஆர். போடும் சண்டை ரசிகர்களிடம் பெரும் பாராட்டுதலைப் பெற்றது. பின்னர் 1957_ல் "சக்ரவர்த்தி திருமகள்", "ராஜராஜன்", "புதுமைப்பித்தன்", "மகாதேவி" ஆகிய படங்கள் வெளிவந்தன. சக்ரவர்த்தி திருமகனில் அஞ்சலிதேவியும், ராஜராஜனில் பத்மினியும், புதுமைப்பித்தனில் பி.எஸ்.சரோஜாவும், "மகாதேவி" யில் சாவித்திரியும் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தனர். இந்தப்படங்கள் மதுரை வீரனோடு ஒப்பிடக்கூடிய சூப்பர் ஹிட் படங்கள் அல்லவென்றாலும், வெற்றிப்படங்களே.
இதற்கிடையே "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்" என்ற படக்கம்பெனியைத்தொடங்கி, சொந்தமாக "நாடோடி மன்னன்" படத்தை எம்.ஜி.ஆர். தயாரிக்கலானார். ஜெமினியின் "சந்திரலேகா"வுக்குப் பிறகு தமிழ்நாட்டில் மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் "நாடோடி மன்னன்"தான். இதில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். கதாநாயகியாக பானுமதி நடித்தார். சரோஜாதேவி இரண்டாவது கதாநாயகி. மற்றும் எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா, எம்.ஜி.சக்ரபாணி, சந்திரபாபு, எம்.என். ராஜம், ஜி.சகுந்தலா என்று பெரிய நட்சத்திரக் கூட்டமே இதில் இடம் பெற்றது. கதையை "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்" கதை இலாகா உருவாக்கியிருந்தது. வசனங்களை ரவீந்தர் எழுதினார்.
படத்தின் பின்பகுதியில்தான் சரோஜாதேவி வருவார். அந்த 7 ஆயிரம் அடியையும் கலரில் எடுக்க எம்.ஜி.ஆர். தீர்மானித்தார். இதனால் ஏற்கனவே திட்டமிட்டதைவிட, செலவு எக்கசக்கமாக உயர்ந்தது. தன் சொத்துக்களை எல்லாம் அடமானம் வைத்து, படத்தயாரிப்புக்கு வேண்டிய பணத்தைத் திரட்டினார், எம்.ஜி.ஆர். படத்தயாரிப்பு, இரட்டை வேடம் ஆகியவற்றுடன் டைரக்ஷன் பொறுப்பையும் முதல் முறையாக எம்.ஜி.ஆர். ஏற்றிருந்தார். எனவே, இரவு_ பகலாக அவர் வேலை பார்க்க நேர்ந்தது. தன் சொத்துக்களை எல்லாம் முதலீடு செய்து எம்.ஜி.ஆர். இப்படத்தை எடுத்ததால், அவருடைய நண்பர்கள் மிகவும் கவலை அடைந்தனர். இது குறித்து எம்.ஜி.ஆரிடமே நிருபர்கள் கேட்டபோது, "படம் வெற்றி பெற்றால், நான் மன்னன்; தோல்வி அடைந்தால் நாடோடி" என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்
. 19,830 அடி நீளமுள்ள "நாடோடி மன்னன்" 22_8_1958_ல் வெளியாயிற்று. திரையிடப்பட்ட தியேட்டர்களில் எல்லாம் காலையிலேயே ரசிகர்கள் நீண்ட `கிï' வரிசையில் நின்றனர். படம் "மெகா ஹிட்" என்பது, திரையிடப்பட்ட முதல் நாள் _முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது. இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்திருந்தார். இரட்டை வேடக்காட்சிகளை ஒளிப்பதிவாளர் ஜி.கே.ராமு அருமையாகப் படமாக்கியிருந்தார். பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா உள்பட பலர் எழுதியிருந்தார்கள். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்திருந்தார். "தூங்காதே தம்பி தூங்காதே", "சம்மதமா, நான் உங்கள் கூடவர சம்மதமா?" முதலான பாடல்கள் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தன. ஏற்கனவே "வசூல் சக்ரவர்த்தி" என்று பெயர் பெற்றிருந்த எம்.ஜி.ஆர்.
இப்படத்தின் மூலம் "தமிழ்த்திரை உலகின் முடிசூடா மன்னன்" என்று புகழ் பெற்றார். "நாடோடி மன்னன்" வெற்றி விழா மதுரையில் நடந்தபோது, 4 குதிரைகள் பூட்டிய அலங்காரரதத்தில் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். ஊர்வலத்தின் முன்னால் கொண்டு செல்லப்பட்ட உலக உருண்டை மீது, ஒரு தங்க வாள் மின்னியது. அது 110 பவுனில் தயாரிக்கப்பட்டதாகும். ஊர்வலம் முடிந்தபின், தமுக்கம் மைதானத்தில் நடந்த பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில், அந்த வீரவாள் எம்.ஜி.ஆருக்கு பரிசாக வழங்கப்பட்டது. வாளை வழங்கியவர் நாவலர் நெடுஞ்செழியன். இந்த விழாவை, மதுரை முத்து ஏற்பாடு செய்திருந்தார். அன்றைய சபாநாயகர் யு.கிருஷ்ணாராவ், எதிர்க்கட்சித் தலைவர் வி.கே.ராமசாமி முதலியார், பி.டி.ராஜன், நடிகர்கள் கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, டி.கே.பகவதி, கவிஞர் கண்ணதாசன், டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பேசினர். எம்.ஜி.ஆர். மிகவும் மகிழ்ச்சியோடு இருந்த தருணத்தில், எதிர்பாராத சோதனை ஏற்பட்டது.