maalaimalar.com nov 12 2009

மதுரை வீரன்" மூலம் வசூல் சக்ரவர்த்தி ஆனார், எம்.ஜி.ஆர்.- பல ஊர்களில் வெள்ளி விழா

மலைக்கள்ளனுக்குப் பிறகு எம்.ஜி.ஆரும் சிவாஜிகணேசனும் இணைந்து நடித்த "கூண்டுக்கிளி" வெளிவந்தது. டி.ஆர். ராமண்ணா டைரக்ஷனில், ஆர்.ஆர்.பிக்சர்சார் தயாரித்த படம் இது. விந்தன் வசனம் எழுதினார். இருபெரும் நடிகர்கள் சேர்ந்து நடித்த படம் என்பதால், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அது எம்.ஜி.ஆர். படமாகவோ, சிவாஜி படமாகவோ அமையாதது மட்டுமல்ல, ஒரு நல்ல படமாகவும் அமையவில்லை. முக்கியமாக கதை சரியாக இல்லாததால், படம் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியை ஈடுசெய்யும் வகையில் 1955_ல் "குலேபகாவலி"யை தயாரித்தார், ராமண்ணா. எம்.ஜி.ஆருடன் டி.ஆர். ராஜகுமாரி, ஜி.வரலட்சுமி, ஈ.வி.சரோஜா, ராஜசுலோ சனா, சந்திரபாபு ஆகியோர் நடித்தனர். ஜனரஞ்சக படமான "குலேபகாவலி" வெற்றிகரமாக ஓடியது. இதன்பின் தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படமான "அலிபாபாவும் 40 திருடர்களும்" படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இப்படம், 1956 பொங்கல் தினத்தில் வெளிவந்து, வெற்றி முரசு கொட்டியது.

 

பழம் பெரும் படத்தயாரிப்பாளரான லேனா செட்டியார், தமது கிருஷ்ணா பிக்சர்ஸ் சார்பில் "மதுரை வீரன்" கதையை பிரமாண்டமாகத் தயாரித்தார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பானுமதி, பத்மினி ஆகிய இருவரும் நடித்தனர். மற்றும் டி.எஸ். பாலையா, ஓ.ஏ.கே.தேவர், ஆர்.பாலசுப்பிரமணியம், டி.கே.ராமச்சந்திரன், ஈ.வி.சரோஜா, எம்.ஆர்.சந்தான லட்சுமி, "மாடி" லட்சுமி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் ஆகியோரும் நடித்தனர். கர்ண பரம்பரைக் கதையான மதுரை வீரனுக்கு, திரைக்கதை _வசனம் எழுதினார், கவிஞர் கண்ணதாசன். பாடல்களை கண்ணதாசனுடன் உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் எழுத ஜி.ராமநாதன் இசை அமைத்தார். டைரக்ஷன் யோகானந்த்.

கழுத்தில் மாலையுடன் குழந்தை பிறந்ததால், நாட்டுக்கு ஆகாது என்கிறார், ஜோதிடர். அதைக் கேட்டு, குழந்தையை காட்டில் விட்டு விடுகிறார், அரசர். குழந்தையை, செருப்பு தைக்கும் தொழிலாளியும், அவர் மனைவியும் (என்.எஸ்.கிருஷ்ணன் _ டி.ஏ.மதுரம்) எடுத்து "வீரன்" என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள். வீரன் வளர்ந்து வீரம்மிக்க இளைஞன் (எம்.ஜி.ஆர்.) ஆகிறான். ஒரு சமயம் அரசகுமாரி பொம்மியை (பானுமதி) காப்பாற்றுகிறான். அவள் வீரனைக் காதலிக்கிறாள். பொம்மியின் முறைமாமன் நரசப்பன், பொம்மியை காவலில் வைத்து, கட்டாய திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறான். ஆனால், வீரன் தக்க தருணத்தில் பொம்மியைக் காப்பாற்றி, சிறை எடுத்துச் செல்கிறான். அவனுடைய வீரத்தை மெச்சிய விஜயரங்க சொக்கன், பொம்மி வீரனுக்கே உரியவள் என்று தீர்ப்பு கூறுகிறான். பொம்மியை மணக்கிறான், வீரன். திருமலை நாயக்கனுக்கு தளபதியாக நியமிக்கப்படுகிறான். அரசவை நர்த்தகி (பத்மினி) வெள்ளையம்மாள் வீரனைக் காதலிக்கிறாள். வீரனுக்கு எதிராக நரசப்பனும், குடிலனும் சதி செய்கிறார்கள். அவனைப் பற்றி, மன்னரிடம் பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள். இதனால் வீரனை குற்றவாளி என்று மன்னர் தீர்மானித்து, மாறு கால், மாறுகை வாங்க உத்தரவிடுகிறார். கொலைக்களத்துக்கு இழுத்துச் செல்லப்படுகிறான், வீரன். அவனுடைய ஒரு கையும், காலும் துண்டிக்கப்படுகின்றன. அவன் இருக்கும் இடத்துக்கு பொம்மியும், வெள்ளையம்மாளும் ஓடி அவனுடன் உயிர் துறக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் காலம் காலமாக மதுரை வீரனை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.

மதுரை வீரன் கதை ஏற்கனவே வி.ஏ.செல்லப்பா _ டி.பி.ராஜலட்சுமி நடித்து 1939_ல் படமாக வெளிவந்து வெற்றி பெற்றது. எனினும், எம்.ஜி.ஆர். நடித்த "மதுரைவீரன்" 13_4_1956_ல் வெளிவந்து பல ஊர்களில் 25 வாரங்களுக்கு மேல் ஓடி, வெள்ளி விழா கண்டு, வசூலில் புரட்சி செய்தது. குறிப்பாக மதுரையில் இமாலய வெற்றி பெற்றது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன், பட அதிபர் லேனா செட்டியாருக்கும், எம்.ஜி.ஆருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. உடுமலை நாராயணகவி எழுதிய "பார் கடல் அலை மேலே" என்ற பக்திப் பாடல், இப்படத்தில் இடம் பெற்றிருந்தது. அந்தப் பாடலுக்கு பத்மினி நடனம் ஆடியிருந்தார். தி.மு.கழகத்தில் சேர்ந்து விட்ட காரணத்தால், இப்பாடல் தன் கொள்கைக்கு முரண்பட்டது என்று எம்.ஜி.ஆர். கருதினார். எனவே, பாடல் காட்சியை நீக்கிவிடும்படி பட அதிபரிடம் எம்.ஜி.ஆர். வற்புறுத்தினார். பாடலை விட, பத்மினியின் நடனம் அருமையாக அமைந்திருந்தது. அதை நீக்கிவிட பட அதிபர் லேனா செட்டி யாருக்கு மனமில்லை. எம்.ஜி.ஆர். எதிர்ப்பை மீறி படத்தை வெளியிடவும் விரும்பவில்லை. எனவே, அவர் ஒரு யுக்தி செய்தார். நடனக்காட்சியை மட்டும் தனியாக வெட்டி எடுத்தார். தனியாக சென்சார் சர்டிபிகேட் வாங்கினார். இடைவேளை முடிந்ததும், தனியாக இந்த நடனக் காட்சியைத் திரையிட்டு, நிலைமையை சாமர்த்தியமாக சமாளித்தார்.

"மதுரை வீரன்" வெற்றியைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆருக்கு ஒவ்வொரு ஊரிலும் ரசிகர் மன்றங்கள் தோன்றின. ஏற்கனவே மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த தி.மு.கழகத்தில், சக்தி வாய்ந்த தலைவராக எம்.ஜி.ஆர். உருவாகத் தொடங்கினார்.