காதலித்து மணந்த முதல் மனைவியை விபத்தில் பறிகொடுத்து விட்டு (சந்தர்ப்ப சூழ்நிலையால் அவள் இறந்து விட்டதாக நினைத்து) பற்றற்ற வாழ்க்கை வாழும் ஒரு புற்றுநோய் டொக்டர் தன்னை வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடனாக (விருப்பமில்லாமல்) செய்துகொண்ட இரண்டாவது திருமணத்தில் மனம் ஈடுபடாத வாழ்க்கை, அவளோடு ஏற்பட்ட வாக்குவாதத்தால் விபத்து நேர்ந்து கண்களையும் இழந்து தவிக்க, சந்தர்ப்பவசமாக முதல் மனைவியே அவருக்கு நேர்ஸாக வர, இரண்டாவது மனைவியோடு தன் கணவர் விரும்பாத வாழ்க்கை வாழ்வது அறிந்து, அவரை அவள் பால் திருப்ப எடுக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, உடல் நலமில்லாத அவரை வோக்கிங் அழைத்துப் போகும் போது, அவர் மனம் மாற்றம் ஏற்பட பாட, அதற்கு மறுப்பு தெரிவித்து கணவர் பாடும் பாடல். இதுதான் சிட்டுவேஷன்.
இதற்கு பாடல் எழுதுங்கள்’ – இயக்குநர் பீம்சிங் ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். பல்லவிக்காக மெல்லிசை மன்னரும் மூன்று ட்யூன்கள் போட்டு காண்பித்தார். அதில் ஒன்று பிடித்துப் போக, பல்லவிக்காக வரிகளை யோசித்துக் கொண்டிருந்த கண்ணதாசன், தன் உதவியாளர் பஞ்சு அருணாசலத்திடம் “டேய் பஞ்சு, காரில் என் ஃபைல் இருக்குல்ல? அதை எடுத்துவிட்டு வா” என்றார். பஞ்சுவும் ஃபைலுடன் வந்தார்.
அதைப் புரட்டி, ஒரு தாளை எடுத்த கவிஞர், “இந்த வரிகளைப் பாருங்கள், கண்ணனைப் பற்றி நான் எழுதிய பாடல். இதில் ‘அவன்’ என்பதை அவள் என்று மாற்றிப் பாருங்கள் விசு போட்ட சந்தத்துக்கும் நீங்க சொன்ன சிட்டுவேஷனுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்” என்றார். பீம்சிங் பாடலை வாங்கிப் பார்த்தார். பாடல் இப்படி இருந்தது. என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய் நான் ‘அவன்’ பேரை தினம் பாடும் குயிலல்லவா என் பாடல் ‘அவன்’ தந்த மொழியல்லவா இதில் ‘அவன் என்று வந்த இடங்களை ‘அவள்’ என்று மாற்றி விஸ்வநாதன், தன் மெட்டோடு பாட, வாவ்! கனகச்சிதமாக பொருந்தியது. எல்லோரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.
மெல்லிசை மன்னர் துள்ளி குதித்தார். ‘எப்படி கவிஞரய்யா இது...?’ என்று. சொற்களை மாற்றிய பின் பாடலின் தன்மை அப்படியே மாறிப்போனது. கடவுளைப் பற்றி கவிஞர் எழுதிய பாடல், இரண்டாவது மனைவியோடு சேர்ந்து வாழும்படி நேர்சாக வந்த முதல் மனைவி அட்வைஸ் செய்ய, அவர் அதை மறுப்பதாக அமைந்தது. என்னை யாரென்றும் எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய். இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய் நான் ‘அவள்’ பேரை தினம் பாடும் குயிலல்லவா என்பாடல் ‘அவள்’ தந்த மொழியல்லவா
படம் - பாலும் பழமும்